பேச்சிப்பாறையில் உள்ள ஆராய்ச்சி மையத்தை தோட்டக்கலை கல்லூரியாக தரம் உயர்த்த குரல் கொடுப்பேன்; காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பிரசாரம்


பத்மநாபபுரம் அரண்மனை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பிரசாரம் செய்த போது
x
பத்மநாபபுரம் அரண்மனை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பிரசாரம் செய்த போது
தினத்தந்தி 29 March 2021 5:45 AM IST (Updated: 29 March 2021 5:42 AM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தை தோட்டக்கலை கல்லூரியாக மாற்ற குரல் கொடுப்பேன் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் பிரசாரம் செய்தார்.

வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனோ தங்கராஜ் ஆகியோர் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தனர்.முதலில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேக்காமண்டபம் பகுதியில் இருந்து அவர்கள் 2 பேரும் நேற்றைய பிரசாரத்தை தொடங்கினர். அப்போது அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி 
வேட்பாளருக்கு கை சின்னத்திலும், சட்ட மன்றத் தொகுதி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்கு அளிக்குமாறு கூறி அவர்கள் பிரசாரம் செய்தார்கள்.

வாக்குறுதிகள்
பின்னர் அவர்கள் குருவிக்காடு, மணக்காவிளை, கரும்பாறை, ஈத்தாவிளை, பாலப்பள்ளி, பத்மநாபபுரம் அரண்மனை, தக்கலை உள்ளிட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் தீவிர பிரசாரம் செய்தனர்.வாக்கு சேகரிப்பின்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜயகுமார் பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களிடம் தெரிவித்து கை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:-

ரப்பர் தொழிற்சாலை
எனது தந்தை எச்.வசந்தகுமாரின் கனவுகளை நனவாக்கவும், குமரி மாவட்ட மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் நான் ஒலிக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் வெற்றி பெற்றால் பேச்சிப்பாறையில் உள்ள அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தை தோட்டக்கலை கல்லூரியாக தரம் உயர்த்த குரல் கொடுப்பேன்.பேச்சிப்பாறை அணை தூர்வாரப்பட்டு சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நவீனப் படுத்துவதற்கு பாடுபடுவேன். ரப்பருக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க முயற்சிகளை மேற்கொள்வேன். குமரி மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை ரப்பர் மூலம் ரப்பர் உதிரி பாகங்கள் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஏற்படுத்தவும், ரப்பர் சார்ந்த தொழில்களை மேம்படுத்த ரப்பர் பூங்கா அமைக்கவும் முயற்சி மேற்கொள்வேன்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை
மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டுவர பாடுபடுவேன். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அத்தனை திட்டங்களும் கொண்டு வரப்படும். எனவே எனக்கு கை சின்னத்திலும், பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனோ தங்கராஜுக்கு உதய சூரியன் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story