இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்; தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்


இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்; தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்
x
தினத்தந்தி 29 March 2021 11:00 AM IST (Updated: 29 March 2021 10:57 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம் செய்தார்.

அறிவுடைநம்பி பிரசாரம்
தஞ்சை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் தஞ்சை ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நீலகிரி ஊராட்சியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.கரூப்ஸ் நகர், ரகுமான் நகர், மானோஜிப்பட்டி, சீதாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து மாலையில் வல்லம் பேரூராட்சி பகுதி முழுவதும் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தஞ்சை வளர்ச்சி

அப்போது வேட்பாளர் அறிவுடைநம்பி பேசியதாவது:-
தமிழகத்தில் தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவார். 3-வது முறை மட்டுமல்ல தமிழகத்தில் இனி எப்போதும் மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும். மேலும் தஞ்சை தொகுதி மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன். தஞ்சை தொகுதியை தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்.தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் தான் தஞ்சை மாநகரம் மட்டும் அல்ல மாவட்டமே வளர்ச்சி அடைந்துள்ளது. தஞ்சை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியில் தான். தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதோடு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது 1000 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்ப பூங்கா
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். மாவட்டம் தோறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். அதனை தஞ்சையில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்,

வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், மருத்துவக்கல்லூரி பகுதி அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் சரவணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, அ.தி.மு.க. நிர்வாகிகள் பாஸ்கரன், அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர் அருள்சகாயகுமார், பா.ஜ.க. அரசு தொடர்புதுறை மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் தர்மதுரை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன்சென்று வாக்கு சேகரித்தனர்.

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு
தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பியை, தேவேந்திரகுல வேளாளர் கல்வி பொருளாதார மேம்பாட்டு இயக்க தலைவர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளை இணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என அழைக்க சட்டம் இயற்றிய பிரதமர் மோடிக்கும், பரிந்துரை செய்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான அறிவுடைநம்பிக்கு ஆதரவு தெரிவிப்பது. மேலும் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளிலும் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story