மீண்டும் தமிழகத்தை விவசாயி ஆள்வதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும்; அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி வேண்டுகோள்


மீண்டும் தமிழகத்தை விவசாயி ஆள்வதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும்; அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 March 2021 11:45 AM IST (Updated: 29 March 2021 11:28 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் தமிழகத்தை விவசாயி ஆள்வதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்று சீர்காழி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்குகள் சேகரிப்பு
சீர்காழி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கதிராமங்கலம், கன்னியாகுடி, திருப்புங்கூர், பெருமங்கலம், ஆதமங்கலம், புங்கனூர், கற்கோவில், எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம் ஆகிய ஊராட்சிகளில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி சீர்காழி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தை விவசாயி ஒருவர் ஆள வேண்டுமா? அல்லது ஒரு குடும்பம் ஆள வேண்டுமா? என நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விவசாயி ஒருவர் தமிழக முதல்-அமைச்சராக ஆட்சி செய்வது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது. மீண்டும் தமிழகத்தை விவசாயி ஆள்வதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பெண்களின் மீது அக்கறை கொண்டு பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்கள் சார்ந்த திட்டங்களான தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை, மகளிர் சுய உதவி குழுக்கள், பெண் கமாண்டோக்கள், அனைத்து மகளிர் காவல் நிலையம், உள்ளாட்சி மன்ற தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார்.

இரண்டு தடுப்பணைகள்
அவரது வழியில் தற்போதைய தமிழக முதல்-அமைச்சர்  பெண்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் அம்மா ஸ்கூட்டி, திருமண உதவித்தொகை, கர்ப்பிணி உதவித்தொகை உள்ளிட்ட உதவி தொகைகளை உயர்த்தி உள்ளார். மேலும் கொரோனா காலங்களில் விலையில்லா ரேஷன் பொருள்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் உதவித்தொகை, பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கி பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார். பெண்களுக்காக என்றுமே பாடுபடும் அரசு அ.தி.மு.க.தான். கடந்த 5 ஆண்டுகளில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் புதிய கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் இரண்டு தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதியில் 8 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அண்ணன் பெருமாள் கோவிலில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இதேபோல் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு திட்டங்கள் மீண்டும் தொடர பொதுமக்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தர வேண்டும் என்றார். 

அவருடன் மாவட்ட துணை செயலாளர்கள் செல்லையன், ரமாமணி, மாவட்ட இணை செயலாளர் ரீமா, மாவட்ட மகளிரணி செயலாளர் சக்தி, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், பா.ம.க.  நிர்வாகிகள் ரவிச்சந்திரன், குமார், த.மா.கா. நிர்வாகி வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சம்மாள், மதியழகன், மாலினி, லதா செந்தில்முருகன், சுதமதி முருகன், அலெக்சாண்டர், தட்சிணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆனந்தி, ஊராட்சி கழக செயலாளர் ரமேஷ், பிரேம், ஹஷீம், கொளஞ்சி, முத்து, கொண்டல் கல்யாணம், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story