மீண்டும் ஆதரவு தாருங்கள் விராலிமலை மேற்கு ஒன்றிய பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்
10 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு உதவிய எனக்கு ஆதரவு தாருங்கள் என்று விராலிமலை மேற்கு ஒன்றிய பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் மேற்கொண்டார்.
விராலிமலை,
விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதுரப்பட்டி, தேராயூர், தென்னம்பாடி, ராஜகிரி, விராலிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயபாஸ்கர் பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
என் உயிர் உள்ளவரை உங்களுக்கு உழைத்துக் கொண்டே இருப்பேன். ஆனால், கண்ணீர்விட்டு ஓட்டு கேட்பவர்கள் உங்களை அடுத்த 5 வருடங்களுக்கு கண்ணீர் விட வைத்து விடுவார்கள். தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. 10 ஆண்டுகளாக இந்த தொகுதி மக்களுக்கு தொடர்ந்து பல நல்ல திட்டங்களை செய்து கொடுத்துள்ளேன். உங்களை நம்பித்தான் மறுபடியும் தேர்தலில் நிற்கிறேன். ஆகவே, எனக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. மேலும், தற்போதைய தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி வருடத்திற்கு 6 சிலிண்டர்கள், அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும், வாசிங்மெசின் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆகவே, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story