ஹைவேவிஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் உறுதி
ஹைவேவிஸ் பகுதி தோட்ட தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் உறுதி அளித்தார்.
உத்தமபாளையம்,
ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன் நேற்று ஹைவேவிஸ் பேரூராட்சி பகுதிகளில் பிரசாரம் செய்தார். அதன்படி மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகராஜமெட்டு ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திரண்டிருந்த மக்களிடையே அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையும். அவ்வாறு அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளான ஏழைகளுக்கு வீடுகள், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வாசிங்மெஷின், குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள், டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளிட்டவை கட்டாயம் நிறைவேற்றப்படும்.
செய்வதைத் தான் சொல்வோம், சொல்வதை தான் செய்வோம் என்ற தாரக மந்திரத்தோடு மீண்டும் அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றிபெறும். அவ்வாறு வெற்றி பெற்றவுடன் மக்கள் நலத்திட்டங்களான மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்.
அ.தி.மு.க. ஆட்சியில்தான் ஹைவேவிஸ் பேரூராட்சி பகுதியில் ரூ.80 கோடியில் சாலைகள் அமைக்கப்பட்டது. இதனால் தான் தற்போது தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஹைவேவிஸ் பகுதிக்கு கூடுதலாக பஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பணியாற்றக்கூடிய தோட்டத் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கப்படும். இங்குள்ள துணை சுகாதாரநிலையம் தரம் உயர்த்தி ஆரம்ப சுகாதாரநிலையமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் வரதராஜன், கம்பம் ஒன்றிய செயலாளர் இளையநம்பி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story