இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
கரூர் மக்களின் செல்லப்பிள்ளையான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று கரூர் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டாள் நகர், பசுபதிபாளையம், அருணாசலம் நகர், கிருஷ்ணா நகர் உள்பட பல்வேறு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் சிறுவர், சிறுமியர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. பொய்களை மட்டும் கூறி ஆட்சிக்கு வந்து விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தாலும் எந்தவித எதிர்ப்பும் இல்லாத அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க ரூ.25 ஆயிரம் வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஆனால் நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் தி.மு.க.விற்கு ஓட்டே போடமாட்டீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் அரங்கேறும். தோல்வி பயத்தில் தி.மு.க.வினர் அநாகரிகமாக பேசிவருகின்றனர்.
தி.மு.க. எம்.பி. முதல்- அமைச்சர் குறித்து தரக்குறைவாக பேசி உள்ளார். தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும். நான் உங்களின் செல்லப்பிள்ளை. அதனால்தான் கரூர் மக்களுக்கு அனைத்து உதவிகளையும், திட்டங்களையும் செய்து வருகின்றேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story