குடுமியான்மலையில் பங்குனி தெப்ப உற்சவம் குப்பகுடி அய்யனார் கோவில் தேரோட்டம்
குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி தெப்ப உற்சவம் நடைபெற்றது. குப்பகுடி அய்யனார் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
அன்னவாசல்:
தெப்ப உற்சவம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ள குடுமியான்மலையில் அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. அதனையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் தெப்ப உற்சவத்தில் எழுந்தருளினர். இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.
அய்யனார் கோவில்
ஆலங்குடி அருகில் உள்ள குப்பகுடியில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. குப்பகுடி கோவிலில் உள்ள உற்சவமூர்த்திகள் கோவிலூர் பாலபுரீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக ைவக்கப்பட்டிருந்தது. மேள தாளம் முழங்க உற்சவ மூர்த்தி அங்கிருந்து இரட்டை மாடு பூட்டிய வண்டியில் குப்பகுடி கோவிலுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது.
தேரோட்டம்
அதைதொடர்ந்து செங்கவளநாட்டு கிராமத்தார்களால் மண்டகப்படி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அய்யனார் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குப்படி பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story