புதுக்கோட்டையில் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு
புதுக்கோட்டையில் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுக்கோட்டை:
தபால் வாக்குப்பதிவு
சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்கிற்கு விண்ணப்ப படிவம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவை வினியோகிக்கப்பட்டன. இதில் பூர்த்தி செய்து விண்ணப்பித்தவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று முதல் தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு தொகுதி வாரியாக தனித்தனியாக பிரித்து தபால் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் தேர்தல் பிரிவு ஊழியர்களும் பணியில் இருந்து போலீசாரின் தபால் வாக்கினை சரிபார்த்து ஓட்டளிக்க அனுமதித்தனர்.
தேர்தல் அதிகாரி ஆய்வு
இந்த வாக்குப்பதிவு நேற்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. இதில் போலீசார் வரிசையில் நின்று தபால் வாக்கினை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த வாக்குப்பதிவின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் அந்த மண்டபத்தில் இருந்து பார்வையிட்டனர்.
போலீசாருக்கான தபால் வாக்குகள் குறித்து அந்த பிரிவு போலீசார் கூறுகையில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் மொத்தம் 2,108 பேர் தபால் வாக்கிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 448 பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்த தொகுதிகளில் வாக்கு அளிக்க கூடியவர்கள்' என்றனர். இந்த சிறப்பு ஏற்பாடு நேற்று ஒரு நாள் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தபால் வாக்கினை பதிவு செய்யாதவர்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி தாலுகாவில் புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தப்பகுதிகளில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கறம்பக்குடி ரெகுநாதபுரம், மழையூர் உள்ளிட்ட பதிகளில் நேற்று தபால் வாக்குப்பதிவு நடந்தது. இப்பணிகளை கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கண்காணித்தனர்.
Related Tags :
Next Story