மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 30 March 2021 12:13 AM IST (Updated: 30 March 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்கு பதிவிற்காக மாவட்டத்தில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களின் வசதிக்காக சாய்வு தளம் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான 2-ம் கட்ட கணினி முறை ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு மின்னணு வாக்குச் செலுத்தும் எந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 16 பட்டன்களில் மட்டுமே வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பதிவு செய்ய இயலும். இந்தநிலையில் பரமக்குடி தொகுதியில் 15, ராமநாதபுரம் தொகுதியில் 19, திருவாடானை தொகுதியில் 15, முதுகுளத்தூர் தொகுதியில் 23 என்ற வீதத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா 2 வாக்குச்செலுத்தும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சின்னம் பொருத்துதல்
அதன்படி பரமக்குடி தாலுகா அலுவலகம், முதுகுளத்தூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூட சேமிப்பு கிட்டங்கி ஆகிய இடங்களில் நடைபெற்ற, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேர்தல் பொது பார்வையாளர் விசோப் கென்யே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். 
ஆய்வின் போது, சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரமக்குடி தொகுதி ஆர்.டி.ஓ.தங்கவேல், முதுகுளத்தூர் தொகுதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மணிமாறன், தாசில்தார்கள் தமீம் ராஜா, செந்தில்குமார், சேகர் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story