வேன், அரசு பஸ் நேருக்குநேர் மோதல்; பெண்கள் உள்பட 4 பேர் பலி
பட்டிவீரன்பட்டி அருகே வேன். அரசு பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே வேன்-அரசு பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் நூற்பாலை வேன்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே ஒட்டுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் நூற்பாலையில் பணிபுரிகின்றனர். இவர்கள் தினமும் வேன்களில் தனியார் நூற்பாலைக்கு வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.
அதன்படி மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூரில் இருந்து நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை வேன் ஒன்று புறப்பட்டது. வத்தலக்குண்டுவை சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவர் வேனை ஓட்டினார்.
நேருக்குநேர் மோதல்
உத்தப்பநாயக்கனூரில் இருந்து வத்தலக்குண்டு வழியாக அந்த வேன் வந்தது. இதனால் வத்தலக்குண்டுவை சேர்ந்த தொழிலாளர்களும் வேனில் ஏறினர். வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டி பிரிவு என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது, திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சும், வேனும் கண்இமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் நடுரோட்டில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்துக்குள்ளான அரசு பஸ், சாலையின் பக்கவாட்டு பகுதியில் மோதி நின்றது.
2 பெண்கள் உள்பட 4 பேர் பலி
இந்த கோரவிபத்தில், வேனில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் வத்தலக்குண்டுவை சேர்ந்த சுகுணா (46), லதா (35) ஆகியோர் பஸ் சக்கரங்களில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதேபோல் வேன் டிரைவர் சுரேஷ் (32) மற்றும் வேனில் வந்த உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த காளிதாஸ் (25) ஆகியோரும் சம்பவ இடத்திேலயே பலியானார்கள்.
26 பேர் காயம்
விபத்து குறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்களும் சென்று, காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் துரைப்பாண்டி, வேனில் வந்த நூற்பாலை தொழிலாளர்கள் முருகேஸ்வரி, ராமலட்சுமி, ராஜேஸ்வரி, ஈஸ்வரி, லாவண்யா, கோகிலா, மதுபாலா அனுபிரியா உள்பட 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு வத்தலக்குண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story