ஒடிசாவில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி உரிய இழப்பீடு கேட்டு உறவினர்கள் திடீர் சாலை மறியல் கடலூரில் பரபரப்பு


ஒடிசாவில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி  உரிய இழப்பீடு கேட்டு உறவினர்கள் திடீர் சாலை மறியல்  கடலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 30 March 2021 2:30 AM IST (Updated: 30 March 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

உறவினர்கள் திடீர் சாலை மறியல்

கடலூர், 
ஒடிசாவில் மின்சாரம் தாக்கி பலியான லாரி டிரைவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு உறவினர்கள் கடலூரில், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 பேர் பலி

கடலூர் சூரப்பநாயக்கன்சாவடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செந்தில்நாதன் (வயது 46). மீன் லாரி டிரைவர். முதுநகர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்தழகன் மகன் மதன்குமார் (37). இவர்கள் 2 பேரும் முதுநகரில் உள்ள தனியார் மீன்கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அதே கம்பெனியில் முதுநகர் லைன்தெருவை சேர்ந்த சாம்ராஜ் மகன் லெனின் (42) என்பவரும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் முதுநகர் மீன் கம்பெனியில் இருந்து மீன் ஏற்றி வருவதற்காக லாரியில் ஒடிசா மாநிலத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள்  மீன் பிடி தளத்திற்கு சென்று, மீன் ஏற்றுவற்காக தயாராக இருந்தனர். அப்போது டிரைவர் செந்தில்நாதன் லாரியை பின்நோக்கி எடுத்தார். அப்போது அங்கிருந்த மின் மாற்றியில் லாரி மோதியது. இதில் மின்சாரம் தாக்கி, செந்தில்நாதன், மதன்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லெனின் பலத்த காயமடைந்தார்.

சாலை மறியல்

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இறந்த 2 பேர் உடலும் நேற்று கடலூர் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இறந்த 2 பேர் குடும்பத்துக்கும் தனியார் மீன் கம்பெனி நிறுவனம் உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.இதை ஏற்ற மீன் கம்பெனி நிர்வாகம் மதன்குமார் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க முன் வந்தது. ஆனால் செந்தில்நாதன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதில் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பியும், பா.ஜ.க. ராணுவ பிரிவு மாவட்ட தலைவருமான பாபு தலைமையில் உறவினர்கள், பா.ஜ.க.வினர், பா.ம.க.வினர் கடலூர் எஸ்.என்.சாவடி - இம்பீரியல் சாலை சிக்னல் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

மேலும் இறந்த செந்தில்நாதன் உடலை ஆம்புலன்சில் வைத்து போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, குணசேகரன், சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் தனியார் மீன் கம்பெனி நிர்வாகம் குறிப்பிட்ட தொகையை செந்தில்நாதன் குடும்பத்துக்கு இழப்பீடாக தருவதாக ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story