மீண்டும் பரவ தொடங்கியதால் பொதுமக்கள் அச்சம்: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 கடைகளை அதிகாரிகள் மூடினர்.
பூந்தமல்லி,
கடந்த ஆண்டு சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவிய நேரத்தில், கோயம்பேடு காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகளில் ஏராளமான வியாபாரிகளுக்கு தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக கோயம்பேடு சந்தை பல நாட்களுக்கு மூடப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிகமாக இயங்கி வந்தது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை தமிழகமெங்கும் சில வாரங்களாக வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 பேருக்கு கொரோனா
இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் 2 கடைகளுக்கு சென்று முன்பும், உள்ளேயும் கிருமி நாசினி தெளித்து கடையை மூடி வைத்தனர்.
இதனால், மார்க்கெட்டுக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட் முக்கிய பங்கு வகித்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story