நேர்மையாளர்களின் தலை என்னை தலைமை பொறுப்புக்கு உயர்த்தும்: இல்லத்தரசிகளுக்கான எங்கள் திட்டங்களை காப்பி அடித்தவர்களால் எங்களுக்கு பயம் இல்லை- செஞ்சி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
இல்லத்தரசிகளுக்கான எங்களது திட்டங்களை காப்பி அடித்து கையில் எடுத்து விட்டார்கள் என்கிற பயம் எங்களுக்கு இல்லை. நேர்மையாளர்களின் தலை என்னை தலைமை பொறுப்புக்கு உயர்த்தும் என்று செஞ்சி பிரசாரத்தில் கமல் ஹாசன் பேசினார்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ஸ்ரீபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து செஞ்சியில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய இருந்தார்.
இந்த நிலையில், புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டு இருந்த கமல்ஹாசன், அங்கிருந்து ஹெலிகாப்டரில் செஞ்சி பகுதிக்கு வர முடியாமல் போனது.
பிரதமர் மோடியின் வருகை காரணமாக, புதுச்சேரியில் ஹெலிகாப்டர், விமானம் பறக்க தடை உத்தரவு இருந்ததால், கமல்ஹாசனின் ஹெலிகாப்டர் அங்கிருந்து பறந்து வர தடை விதிக்கப்பட்டதாக, மக்கள் நீதிமய்யம் கட்சி தரப்பில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சென்னை சென்ற கமல்ஹாசன் அங்கிருந்து ஜூம் ஆப் மூலமாக தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இதற்காக செஞ்சியில் அகன்ற திரை அமைக்கப்பட்டு, அதன் மூலம் அவர் பேசுவது ஒலிபரப்பப்பட்டது.
அதில் மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிடும் செஞ்சி வேட்பாளர் ஸ்ரீபதி, விழுப்புரம் தாஸ், திருவண்ணாமலை அருள், கீழ்பெண்ணாத்தூர் சுகவனம், மயிலம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஸ்ரீதர் ஆகியோரை ஆதரித்து கமல்ஹாசன் பேசியதாவது:-
செஞ்சி எனக்கு புதிதல்ல, பலமுறை இங்கு வந்துள்ளேன். நேர்மையை நம்பி தான் இங்கு நீங்கள் திரண்டுள்ளீர்கள். இவர் நேர்மை, நேர்மை என்று பேசுகிறார், இந்த காலத்தில் எங்கு கிடைக்கும் என்று கேட்பார்கள்.
உங்களை யாரும் பிரியாணி, குவாட்டர் கொடுப்பேன் என்று கூறி அழைத்து வரவில்லை.
மக்களுடன் உரையாட வேண்டும்
புதுச்சேரியில் பிரதமர் வருகைக்கு 144 தடை உத்தரவு என்கிறார்கள். மக்கள் தலைவர்கள் வந்தால், அங்கு மக்கள் திரள்வார்கள் அவர்களுடன் தலைவர்கள் உரையாட வேண்டும் என்பது தான், காந்தியார் காலத்தில் இருந்து வழக்கம். ஆனால், இன்று 144 உத்தரவு என்று செய்தியில் படிக்கிறேன்.
இப்படி ரகசியமாக சந்திப்பு நடத்துபவர்கள் ஒருபுறம் இருக்க, மக்கள் இங்கே திரண்டு காத்திருக்கிறீர்கள். இதை எண்ணி மக்கள் நீதிமய்யம் பெருமை கொள்கிறது.
மீண்டும் வருகிறேன், இவர்களை வெற்றி வேட்பாளராக்கினால் வருவேன் என்று சொல்லமாட்டேன். செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக மாற்றுவது எனது கனவு. தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வர ரெயில், ரோப்கார் வசதி செய்ய வேண்டும்.
கமிஷன் ராஜ்ஜியம் அல்ல
தகவல் அறியும் உரிமை சட்டம் ஒன்று உள்ளது, நமது வேட்பாளர் ஸ்ரீபதி எம்.எல்.ஏ.வான பிறகு இந்த தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, அவர் எவ்வளவு செலவு செய்தார் என்பதை நான் பார்ப்பது இருக்கட்டும், நீங்களே பார்க்கலாம். அதற்கு நானும், வேட்பாளர் ஸ்ரீபதியும் தயார்.
ஏனெனில் நாங்கள் ஒரு பார்ட்னர்ஷிப்பில் உனக்கு இவ்வளவு, எனக்கு இவ்வளவு என்று கமிஷன் பேசும் ராஜ்ஜியம் அல்ல. நாங்கள் மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று வந்துள்ளோம்.
எங்களுக்கு பயம் இல்லை
இல்லத்தரசிகளுக்கான எங்களது திட்டங்களை எவ்வளவு நல்ல திட்டமாக இருந்தால், அவர்கள் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அது தனதே என்று காப்பி அடிப்பார்கள்.
அவர்கள் கையில் எடுத்து விட்டார்கள் என்கிற பயம் எங்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றியது இல்லை. அதை நிறைவேற்ற வேண்டும் என்றால் மக்கள் நீதிமய்யம் மாதிரி ஒரு கட்சி வந்தால் தான் நிறைவேற்ற முடியும்.
மக்களை மய்யமாக வைத்து செயல்படும் கட்சி இது. மக்கள் ஆட்சி அமைய நீங்கள் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களியுங்கள். நேர்மையாளர்களின் தலை என்னை ஒரு தலைமை பொறுப்புக்கு உயர்த்தி வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்நாளை வசப்படுத்தினால் நாளை நமதே.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story