சீர்காழி தொகுதியில் சாதனைகள் தொடர அ.தி.மு.க.வை ஆதரியுங்கள்; பி.வி.பாரதி எம்.எல்.ஏ. வேண்டுகோள்


சீர்காழி தொகுதியில் சாதனைகள் தொடர அ.தி.மு.க.வை ஆதரியுங்கள்; பி.வி.பாரதி எம்.எல்.ஏ. வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 March 2021 8:45 AM IST (Updated: 30 March 2021 8:41 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி தொகுதியில் சாதனைகள் தொடர அ.தி.மு.க.வை ஆதரியுங்கள் என்று பி.வி.பாரதி எம்.எல்.ஏ. கூறினார்.

வாக்குசேகரிப்பு
சீர்காழி அருகே உள்ள கொண்டத்தூர், பாகசாலை, ஆலவேலி, நத்தம், சேமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி பாரதி எம்.எல்.ஏ. தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அவர் கூறியதாவது:- 
கடந்த 5 ஆண்டுகளில் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், உப்பு நீர் உட்புகாத வகையில் 3 இடங்களில் தடுப்பணைகள், அங்கன்வாடி கட்டிடங்கள், நியாயவிலை கட்டிடங்கள், பாலங்கள், பள்ளி கட்டிடங்கள், பயணிகள் நிழலக கட்டிடம், மீன்உலர்த்தும் தளம், வலை பின்னும் கூடம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம், சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், ஊராட்சி தோறும் சமுதாயக் கூடங்கள், சேவை மைய கட்டிடங்கள், நூலக கட்டிடங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. 

சாதனை திட்டங்கள்
இந்த சாதனை திட்டங்கள் மீண்டும் தொடர சீர்காழி தொகுதி மக்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் சீர்காழி தொகுதியில் மக்கள் நலத்தி்ட்டங்களை தொடர முடியும். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அ.தி.மு.க.வுக்கு  மீண்டும் ஆதரவு தரவேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கடந்த 4 ஆண்டுகளில் நாடு போற்றும் அளவில் திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாக்கி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

தேர்தல் அலுவலகம்
தொடர்ந்து பாரதி எம்.எல்.ஏ. வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர், விளக்குமுகதெரு, காந்தி நகர், மருவத்தூர், கீழத்தெரு, நெய்க்குப்பை, நல்லான் சாவடி, மேல்பாதி, ரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருத்தெருவாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக வைத்தீஸ்வரன்கோவிலில் கட்சி தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் பி.வி பாரதி திறந்து வைத்து பேசினார். 

அப்போது மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட இணை செயலாளர் ரீமா, ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், பேரூர் கழக செயலாளர் ரவி, பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேசன், பா.ம.க. மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், பா.ம.க. மாநில நிர்வாகி செந்தில் முருகன், பேரூர் கழக செயலாளர் தில்லை கண்ராஜ், பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் பூக்கடை சுப்பிரமணியன், அருள் குமார், மங்களவதி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story