நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 30 March 2021 4:59 AM GMT (Updated: 30 March 2021 4:59 AM GMT)

நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நாமக்கல்:
நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நரசிம்மசாமி கோவில்
நாமக்கல் மலைக்கோட்டையின் மேற்கு புறத்தில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி குடவறை கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த 27-ந் தேதி சாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மொய் செலுத்தி வழிபாடு செய்தனர்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலையில் நரசிம்மசாமி கோவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நரசிம்மசாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளினார்.
பின்னர் காலை 10 மணி அளவில் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரை கோஷங்கள் எழுப்பிவாறு 4 ரத வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். மதியம் 12.20 மணி அளவில் தேர் நிலையை அடைந்தது.
போலீஸ் பாதுகாப்பு
இதேபோல் நேற்று மாலையில் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த தேர்கள் தட்டாரத்தெரு, சேந்தமங்கலம் ரோடு, ரெங்கர் சன்னதி வழியாக நிலைக்கு வந்தன. இந்த தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.
இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்திலும் போலீசார் சிறிய அளவில் மாற்றம் செய்து இருந்தனர்.
========

Next Story