இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கிறேன்; விராலிமலை தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் விஜயபாஸ்கர் வாக்குறுதி
விராலிமலை தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட கோனாவயல், உய்யக்குடிப்பட்டி, கானட்டாம்பட்டி, மாங்குடி, மண்ண வேளாம்பட்டி, பனங்குடி, சொக்கநாதன்பட்டி, ஆரியூர், பெருஞ்சுனை, குருக்களையாபட்டி, வடமலாப்பூர், திருவேங்கைவாசல், மருதாந்தலை, பணம்பட்டி, மதியநல்லூர், சித்தன்னவாசல், மெய்வழிச்சாலை, கீழக்குறிச்சி, சித்துப்பட்டி, ஊரப்பட்டி, விளத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசுகையில், இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் உங்களோடு இருப்பேன். மேலும் விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அ.தி.மு.க. அரசு வழங்கியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் தொகுதிக்கு கொண்டுவந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை
மக்களுக்காக உழைப்பேன். வரலாற்று சிறப்பு மிக்க காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் இந்த பகுதியில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பும். நிலத்தடி நீர் உயரும். இதேபோல் பலத்திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன். கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றி காட்டியுள்ளேன். வேலை வாய்ப்பை உருவாக்க பெரிய கம்பெனிகள் இங்கு தொழில் தொடங்க உள்ளது. இதனால் வேலைவாய்ப்பு பெருகும். இளைஞர்கள் அனைவருக்கும் தவறாமல் வேலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கிறேன். என் உயிர் உள்ளவரை உங்கள் எண்ணங்கள் அறிந்து செயல்படுவேன். உங்களுக்கு உழைத்த எனக்கு நீங்கள் ஓட்டளிப்பதே சரியான தீர்ப்பாக அமையும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
இதில் அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் சாம்பசிவம், முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நல்லம்மாள்சத்திரம் பகுதியில் மாற்றுக்கட்சியில் இருந்து பலர் விலகி அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.
Related Tags :
Next Story