வேடசந்தூர் தொகுதியில் கிராமங்களில் வீடு தோறும் இலவச குடிநீர் இணைப்பு - தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் உறுதி
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் கிராமப்புறங்களில் வீடு தோறும் இலவச குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் உறுதி அளித்துள்ளார்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் சொக்கலிங்கபுரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் நத்தப்பட்டி, தேவநாயக்கன்பட்டி, தெத்துப்பட்டி, விராலிப்பட்டி, அம்மாபட்டி, எருதப்பன்பட்டி, அச்சணம்பட்டி, உசிலம்பட்டி, குடப்பம், வெள்ளையகவுண்டனூர், கருப்பதேவனூர், வெரியம்பட்டி, கூவக்காபட்டி, பச்சளக்கவுண்டனூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் மக்களிடையே பேசியதாவது:-
நம் தொகுதியில் பெரும்பாலான குளம், கண்மாய்கள் வறண்டு உள்ளது. இதனால் சாகுபடி பணிகள் நடைபெறாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே நமது தொகுதியை வளமாக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி மாயனூர் அணையில் இருந்து வாய்க்கால் வெட்டி காவிரிநீரை வேடசந்தூர் தொகுதிக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளேன். இது எனது கனவு திட்டமாகும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் இத்திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.
நாம் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது நம் தொகுதி மக்களுக்கு காவிரி குடிநீரை கொண்டு வந்தேன். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே இந்த முறை தி.மு.க. வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்&அமைச்சராவது உறுதி. அதனால் நான் வெற்றிபெற்றால் நம் தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன்.
குறிப்பாக நம் தொகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால் பட்டதாரிகள், இளைஞர்கள் வெளியூருக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அதை தடுக்க தொழிற்பேட்டை அமைப்பேன். அதேபோல் லட்சுமணம்பட்டி குடகனாற்றின் குறுக்கே அணை கட்டி வேடசந்தூரில் பாசன பகுதியை அதிகரிப்பேன். மேலும் பால் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் நிலையங்கள் பல அமைப்பேன். இதனால் அவர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும். வாழ்க்கை தரமும் உயரும்.
அதேபோல் வேடசந்தூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், வடமதுரையில் பஸ்நிலையம், புறவழிச்சாலையில் மேம்பாலம், நகருக்கென தனி குப்பைகிடங்கு மற்றும் தொகுதி முழுவதும் சாலை, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய பாடுபடுவேன். இதற்கு மக்களாகிய நீங்கள் தி.மு.க.வை வெற்றிபெற வைக்க வேண்டும்.
மேலும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளான கொரோனா நிவாரண தொகை ரூ.4 ஆயிரம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துதல், முதியோர் உதவித்தொகை ரூ.1500, பெட்ரோல்& டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பஸ்பாஸ், சிறு&குறு விவசாயிகள் கூட்டுறவு சங்க பயிர்கடன் தள்ளுபடி, கிராமங்களில் வீடுதோறும் இலவச குடிநீர் இணைப்பு மற்றும் அனைத்து நலத்திட்டங்களும் ஆட்சிக்கு வந்ததும் கட்டாயம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது வேடசந்தூர் வடக்கு ஒன்றிய ஆர்.கவிதாபார்த்திபன், காங்கிரஸ் வட்டார தலைவர் காசிபாளையம் சி.சாமிநாதன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்விராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் உமாமகேஸ்வரி பாலமுருகன், தாமரைச்செல்வி, கவிதாமுருகன், தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், எரியோடு நகர இளைஞரணி அமைப்பாளர் பண்ணை கார்த்திக், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்திவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எம்.பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர் டி.பி.முருகன், அம்மாபட்டி ஊராட்சி தலைவர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story