மக்களுக்காக சேவை செய்தவர்களை அங்கீகரியுங்கள், வீதி வீதியாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட சைதை துரைசாமி”
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் , அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி களம் இறங்கியிருக்கிறார் .ஒவ்வொரு நாளும் சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியுடன் வரவேற்கிறார்கள், இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை ஜோதி அம்மா நகரில் சைதை துரைசாமி பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அப்பகுதியில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு தன் பிரசாரத்தை தொடங்கினார், அவருக்கு ஆதரவாக பா.ம.க, பா.ஜ.க, தா.மா.கா, உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர் . சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரில் பிரசாரம் மேற்கொண்ட சைதை துரைசாமியை ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய், தேங்காய் உடைத்தும், திஷ்டி கழித்தும், மலர்கள் தூவியும் அப் பகுதி மக்கள் வரவேற்றனர். மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் சிலர் சிலம்பம் ஆடி அவருக்கு வரவேற்பு அளித்தனர், அப்போது ஒரு சிறுமியிடம் இருந்து கம்பை வாங்கி சைதை துரைசாமி சிலம்பம் சுற்றத் தொடங்கினார். மேலும் சிறுமியுடன் சிலம்ப சண்டையிலும் ஈடுபட்டார், இதனை பார்த்த அப்பகுதியினர் ஆரவாரத்தில் கைதட்டி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர் ஒருவரின் பெண் குழந்தைக்கு "வெற்றிச்செல்வி" என்று பெயர் சூட்டினார். தேர்தல் பிரச்சாரத்தின்போது கொரோனா காலம் என்பதால் அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்று அன்புடன் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் நிருபர்களிடம் , இந்த ஜோதி நகர் உருவாக்கியதே நான்தான், பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இங்கு குடியிருப்பது கேள்விக்குறி எனும் நிலையில், மக்கள் இருந்தபோது, இந்த இடத்தை நல்லபடியாக அவர்களுக்கு ஒதுக்கி பட்டா உள்ளிட்ட எல்லா தேவைகளையும் செய்து தந்தேன். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மற்றும் சுகாதாரத்துடன் வாழ்வதற்கும் மாற்று திட்டம் இருக்கிறது, சைதை பகுதி மக்களுடன் 50 ஆண்டுக்கும் மேலாக எனது மக்கள் சேவை நீடித்து வருகிறது ,இந்தப் பணி தொடரும். எம்.எல்.ஏவாக இருந்த போதும் ,மேயராக இருந்த போதும் உதவி செய்திருக்கிறேன், மனிதநேய அறக்கட்டளை மூலமும் உதவி வருகிறேன். எனது உதவிகள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கும் . இதுபோல் சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் எனக்கு சேவை நிறைந்து உள்ளது என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story