மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
7 சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
திண்டுக்கல்:
வாக்குப்பதிவு எந்திரங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பழனியில் 405, ஒட்டன்சத்திரத்தில் 352, ஆத்தூரில் 407, நிலக்கோட்டையில் 342, நத்தத்தில் 402, திண்டுக்கல்லில் 397, வேடசந்தூரில் 368 என மொத்தம் 2 ஆயிரத்து 673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த வாக்குச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயாராக உள்ளன. இதேபோல் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் 7 தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து அவை அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரேண்டம் முறையில் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கப்பட்டது.
சின்னம் பொருத்தும் பணி
இதைத் தொடர்ந்து 7 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவை நேற்று தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டு பொருத்தப்பட்டது.
அதேபோல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நிலக்கோட்டை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
இதனை கலெக்டர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story