ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம்


ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம்
x
தினத்தந்தி 30 March 2021 6:30 PM GMT (Updated: 30 March 2021 1:53 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.

ஏரல்,

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து, கனிமொழி எம்.பி. நேற்று மதியம் ஏரல் காந்தி சிலை அருகில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ஊர்வசி அமிர்தராஜின் தந்தை ஊர்வசி செல்வராஜ், கடந்த 2006-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவர் இந்த தொகுதியில் மிக சிறப்பாக பணியாற்றினார். மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றினார். தந்தையை போன்று ஊர்வசி அமிர்தராஜிம் தொகுதி மக்களுக்காக ஏராளமான நலத்திட்ட பணிகளை தொடர்ந்து செய்வார். இதற்கு வாய்ப்பு தாருங்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரியதாக கூறுகின்றனர். ஆனால், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. ரேஷன் கடையில் எப்போது சென்று கேட்டாலும், உணவுப்பொருட்கள் தீர்ந்து விட்டதாக கூறுகின்றனர்.

தமிழகத்தில் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கி அரசியல் செய்கின்றனர். எனவே, மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தெளிவாக பணியாற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. வீடுகள்தோறும் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்களா?. ஆனால் வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பினை பெறும்நிலை உள்ளது.

விரைவில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 3½ லட்சம் அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களும், இளம்பெண்களுமே நியமிக்கப்படுவார்கள். புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். தேசிய ஊரக திட்டத்தில் ஆண்டுக்கு 150 நாட்கள் பணி வழங்கி, தினக்கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சிறப்பாக நடைபெறும் வகையில், சுழல் நிதி, கடன் உதவி வழங்கப்படும். இளைஞர்களுக்கான சுய உதவிக்குழுக்களும் தொடங்கப்பட்டு, தொழில் தொடங்க வட்டியில்லாத கடனுதவி வழங்கப்படும். கொரோனா கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மருதூர் அணையில் இருந்து உபரிநீர் தோழப்பன்பண்ணை குளத்துக்கு வழங்கப்படும். அனைத்து கிராமங்களின் வழியாகவும் பஸ்கள் இயக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்க ஆவன செய்யப்படும். எனவே ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜிக்கு அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், வேங்கையன், பாலமுருகன், ஆனந்த், கார்த்தீசன், சாதிக், நகர செயலாளர்கள் ஏரல் பார்த்தீபன், சாயர்புரம் அறவாழி, பெருங்குளம் சுடலை, முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காளிதாஸ், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், சிறுத்தொண்டநல்லூர் கிளை செயலாளர்கள் சேகர், கொற்கை மாறன், இளைஞரணி முகம்மது பக்மி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை, ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி, ஓ.பி.சி. பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட பொருளாளர் எடிசன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன், யூனியன் கவுன்சிலர் பாரத், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், ஏரல் நகர செயலாளர் பெஸ்டி, உமரிக்காடு பாஸ்கர், காந்தி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார பகுதியான ராமசாமிபுரம், திருப்பணிசெட்டிகுளம், வலசைகாரன்விளை, கொத்தலரிவிளை, சக்கம்மாள்புரம், சண்முகபுரம், புதுநயினார்புரம், காமராஜநல்லூர், கோட்டைக்காடு, திருவழுதிநாடார்விளை, ஏரல், வாழவல்லான் கொற்கை மணலூர், அக்கசாலை, முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் சென்று கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

Next Story