கம்பம் இரும்பு கடையில் ரூ.10 லட்சம் தொடர்பாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையால் பரபரப்பு
கம்பம் இரும்பு கடையில் ரூ.10 லட்சம் தொடர்பாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் :
கூடலூர் அருணாச்சலம் கவுடர் தெருவை சேர்ந்தவர் நாகையசாமி (வயது 71) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் கம்பம் புதிய பஸ் நிலையம் நுழைவுவாயில் அருகே இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது கடையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரவணனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது கடையில் ரூ.10 லட்சம் இருந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
வருமான வரித்துறை
அப்போது நாகையசாமி, நிலம் வாங்குவதற்காக ரூ.10 லட்சத்தை கடையில் வைத்திருந்ததாக கூறி, இதற்காக கடந்த வாரம் தனது மனைவியின் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றதற்கான ரசீதுகளை காண்பித்தார்.
இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வருமான வரித்துறை உதவி ஆணையர் பூவலிங்கம், தேனி மாவட்ட வருமான வரித்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் விரைந்து வந்து கடையில் சோதனை நடத்தினர்.
மேலும் அவர்கள் கடையில் வைத்திருந்த ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களை சரிபார்த்தனர். இதில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதற்கு உரிய ஆவணங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து நாகையசாமியிடம் பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு வருமான வரித்துறை உதவி ஆணையர் பூவலிங்கம் கூறினார்.
அதன்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை நாகையசாமியிடம் ஒப்படைத்தனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையால் கம்பம் பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர், வணிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story