நான் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருபவனல்ல! முத்திபாளையத்தில் அமைச்சர் வேலுமணி பிரச்சாரம்
நான் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருபவனல்ல'என முத்திபாளையத்தில் நடந்த பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி பேசினார்.
பேரூர்,
தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட முத்திபாளையம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பிரச்சாரத்தில் பேசியபோது; எந்த திட்டங்கள் வந்தாலும் அதை தொண்டாமுத்தூர் தொகுதியில் செயல்படுத்தி உள்ளோம். புதிய கல்லூரி, நொய்யல்சீரமைப்பு,சாலைகள்,பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டங்கள் எனக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளோம்.
நான் தொகுதியில் சாதி, சமுதாய வேறுபாடுகளை பார்த்தது இல்லை, கொரோனா காலத்தில் எந்த பாகுபாடுகளும் இன்றி அனைத்து மக்களுக்கும் பணியாற்றி உள்ளோம். எனவே அனைவரும் ஒருமித்த கருத்தாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயன்றவர் ஸ்டாலின், அதை முறியடித்து ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தோம். நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருபவனல்ல.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நில அபகரிப்பு இல்லை, வசூல் இல்லை. இங்குள்ள நிர்வாகிகள் கட்டபஞ்சாயத்து செய்வது இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். மேலும், அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுதோறும் 6 சிலிண்டர், குடும்பத்தலைவிக்கு ரூ.1,500 மற்றும் முதியோர் ஓய்வூதியத்தொகை 2000 ஆக அறிவித்துள்ளோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற பிறகு, தொகுதி பக்கமே எம் பி.,யை காணவில்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது.
ஆனால் நாங்கள் அப்படியல்ல. கொரனோ காலத்தில் 23 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள், காய்கறி, முட்டை ,சத்து மாத்திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு உறுதுணையாக நின்றோம். இவ்வாறு அவர் பிரச்சாரத்தில் பேசினார். இதில், ஒன்றிய தலைவர் வி.மதுமதி விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story