விவசாயிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை
தகராறினை விலக்க முயன்ற பெண் கல்வீச்சில் பலியானார். இந்த வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது
ராமநாதபுரம்
வயலில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறினை விலக்க முயன்ற பெண் கல்வீச்சில் பலியானார். இந்த வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
கல்வீச்சு
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மாரந்தையை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 40). இவர் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த விவசாயி வேலாயுதம்(45) மற்றும் சிலர் வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
மேலும் அவர்கள் ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கி கொண்டனர். இதை பார்த்த மாரியம்மாள் அந்த சண்டையை விலக்கிவிட முயன்றார். அப்போது வேலாயுதம் எறிந்த கல் ஒன்று மாரிம்மாளின் மேல் விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
5 ஆண்டு ஜெயில்
இதுதொடர்பாக மாரியம்மாளின் அக்காள் வள்ளி அளித்த புகாரின்பேரில் இளஞ்செம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து வேலாயுதம் உள்பட கல்வீச்சில் ஈடுபட்டதாக 10 பேரை கைது செய்தனர். ேமலும் இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிர் விரைவு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா, வேலாயுதத்திற்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். வேலாயுதம் எறிந்த கல் பட்டுதான் மாரியம்மாள் இறந்ததாக சாட்சிகளின் அடிப்படையில் உறுதியானதால் இந்த வழக்கில் மற்ற 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story