வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்
ராமநாதபுரம்
வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.
வாக்குச்சாவடிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக உத்திரகோசமங்கை அருகே உள்ள வேளாண்மைத்துறை சேமிப்பு கிட்டங்கியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்கு பதிவிற்காக மாவட்டத்தில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களின் வசதிக்காக சாய்வு தளம் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கிருமிநாசினி பாட்டில்கள்
மாவட்டத்தில் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிந்திட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தரும் வாக்காளர்களுக்க உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கி, வாக்குப்பதிவு செய்ய பயன்படுத்தும் கைக்கு கையுறை வழங்கிடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்படும் கையுறைகளை வாக்குச்சாவடி மையங்களிலேயே சேகரித்து பொது சுகாதாரத்துறை வரையறுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முறையே கழிவு மேலாண்மை செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1729 தெர்மல் ஸ்கேனர் கருவிகள், கிருமிநாசினி 29,500 பாட்டில்கள், 13 லட்சத்து 91 ஆயிரம் கையுறைகள், 50 ஆயிரம் ரப்பர் கையுறைகள், கழிவு மேலாண்மைக்கான 10 ஆயிரம் பைகள், தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்காக 50 ஆயிரம் முக கவசங்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி உடனிருந்தார்.
தபால் தலை
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தபால் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டத்தின் கீழ் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய தபால் தலையினை வெளியிட கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் பெற்றுக் கொண்டார். மேலும், அரசுத்துறைகளில் அனுப்பப்படும் அரசு கடிதங்களில் இந்த தபால் தலையை பயன்படுத்தி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பழனிக்குமார், நஜிமுன்னிசா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தேர்தல் பிரிவு தாசில்தார் கார்த்திகேயன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story