மந்தாரக்குப்பம் அருகே பரிதாபம் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்
மந்தாரக்குப்பம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
டிரைவர் பலி
நெய்வேலி அருகே உள்ள மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் சுந்தரமூர்த்தி(வயது 40) டிரைவரான இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் 2-ல் உள்ள ஒரு தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சுந்தரமூர்த்தி நேற்று மதியம் மந்தாரக்குப்பம் அடுத்த கொம்பாடிகுப்பம் கிராமம் பகுதியில் மண் அகற்றும் பணியில் பயன்படுத்தப்படும் மண் வெட்டும் எந்திரத்திற்கு லாரியின் மூலம் டீசல் எடுத்துச் சென்றார். கொம்பாடிக்குப்பம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுந்தரமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
தர்ணா போராட்டம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு, விபத்தில் இறந்த சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு பெற்று தருவதோடு, அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story