காஷ்மீரில் இருந்து குமரிக்கு 8 நாட்களில் சைக்கிளில் வந்து வாலிபர் கின்னஸ் சாதனை
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு 8 நாட்களில் சைக்கிளில் பயணம் செய்து வந்து வட மாநில வாலிபர் கின்னஸ் சாதனை படைத்தார்.
கன்னியாகுமரி:
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு 8 நாட்களில் சைக்கிளில் பயணம் செய்து வந்து வட மாநில வாலிபர் கின்னஸ் சாதனை படைத்தார்.
வடமாநில வாலிபர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நார்பல் மாவட்டம் பட்காம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஆதில் டெலி (வயது 24). கல்லூரி மாணவரான இவர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் குறைந்த நேரத்தில் பயணம் செய்து கின்னஸ் சாதனை புரிய திட்டமிட்டார்.
அதன்படி அவர் கடந்த 22- ந்தேதி காஷ்மீரில் உள்ள லால் சவுக் என்ற பகுதியில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இதை டிவிஷனல் போலீஸ் கமிஷனர் பாண்டுரங்க போலே கொடியசைத்து தொடங்கி வைத்தார். அங்கு இருந்து பதான்கோட், டெல்லி, ஆக்ரா, நாக்பூர், ஐதராபாத், சேலம், மதுரை வழியாக நேற்று காலை கன்னியாகுமரி வந்து சேர்ந்தார்.
சாதனை
கன்னியாகுமரியில் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் அவரை வரவேற்றார். நாகர்கோவில் கோட்டார் உகா சேவா மருத்துவமனையின் நிர்வாகி இந்த கபூர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 8 நாட்கள் ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் 37 விநாடிகளில் அவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வந்து சாதனை புரிந்துள்ளார்.
முன்னதாக இதே போன்று ஒரு பயணத்தை மராட்டியத்தை சேர்ந்த 17 வயது மாணவன் மஹாஜன் செய்திருந்தார். அவர் 8 நாட்கள் 7 மணி நேரம் 38 வினாடிகளில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வந்து சேர்ந்தார்.
முன்பு கின்னஸ் சாதனையாக கருதப்பட்ட அந்த சாதனையை முறியடித்து தற்போது அதில் 6 மணி நேரம் ஒரு நிமிடம் முன்னதாக கன்னியாகுமரி வந்து சேர்ந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அவரை அனைவரும் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story