சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் எளிமையாக நடந்த குண்டம் விழா பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர்


சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில்  எளிமையாக நடந்த குண்டம் விழா பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 31 March 2021 2:25 AM IST (Updated: 31 March 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் எளிமையான முறையில் நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டு்ம் தீ மிதித்தனர்.

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் எளிமையான முறையில் நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டு்ம் தீ மிதித்தனர். 
பண்ணாரி அம்மன்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் விவசாயிகள் தங்கள் வளர்ப்பு மாடுகளை குண்டம் இறங்க வைத்து அம்மனை வழிபடுவார்கள். இதுதவிர விவசாய நிலங்களில் விளையும் பயிர்களையும் குண்டத்தில் இட்டு வழிபடுவார்கள். இதனால் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.
எளிமையாக நடந்தது
குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் தொடங்கியதும் மழை பெய்யும். அதே போல் இந்த ஆண்டு திருவிழாவுக்காக பூச்சாட்டப்பட்டதும் பண்ணாரியில் மழை கொட்டியது. மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக ஒரு வாரத்துக்கு முன்பே பண்ணாரிக்கு வந்து கோவில் வளாகத்தில் தங்கி இருந்து குண்டத்தில் இறங்குவார்கள்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதன்படி கடந்த 15-ந் தேதி எளிமையான முறையில் கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் அம்மன் திருவீதி உலாவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
கட்டுப்பாடுகளுடன் அனுமதி
கடந்த 23-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கலாம் என்றும், பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லை என்றும் முடிவு செய்து மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் அறிவித்தது. மேலும் குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படமாட்டாது எனவும், கோவில் வளாகத்தில் புதிய கடைகள் அமைக்கவும், ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் அனுமதி இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டது. அதே நேரம் குண்டம் நடைபெறும் நாளில் அதிகாலை முதல் இரவு 8.15 மணி வரை பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்
இதையடுத்து நேற்று அதிகாலை முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3.30 மணி அளவில் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை மற்றும் பீனாச்சி வாத்தியம் முழங்க பூசாரிகள் ஊர்வலமாக தெப்பக்குளத்துக்கு சென்று பூஜை செய்தனர். பின்னர் அங்கிருந்து படைக்கலத்துடன் மீண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர். அதன் பின்னர் கோவில் முன்பு ஏற்கனவே தயார் செய்யப்பட்ட குண்டத்துக்கு தலைமை பூசாரி ராஜேந்திரன் தலைமையில் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் பற்ற வைக்கப்பட்டு தலைமை பூசாரி ராஜேந்திரன் பூ தூவி வணங்கி பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினார். தொடர்ந்து கோவில் பூசாரிகள் ஆறுமுகம், செந்தில்குமார் மற்றும் படைக்கல பூசாரிகள் என மொத்தம் 11 பேர் மட்டுமே குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
5 நிமிடத்தில்...
கோவிலின் முன்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க தடுப்புகள் கட்டப்பட்ட தகர சீட்டினால் ஆன செட் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் குண்டம் அமைக்கப்பட்ட பகுதி தகர சீட்டுகளால் அடைக்கப்பட்டது. பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
வழக்கமாக அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு தொடங்கி மாலை 4 மணி வரை 12 மணி நேரம் நடைபெறும். இதில் சுமார் 1½ லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு 11 பூசாரிகள் மட்டும் தீ மிதித்ததால் 5 நிமிடத்தில் குண்டம் இறங்கும் நிகழ்வு நிறைவு பெற்றது.
பாதுகாப்பு பணி
இதையடுத்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், வீணை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் தடுப்புகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குண்டம் விழாவுக்கான ஏற்பாடுகளை பண்ணாரி அம்மன் கோவில் இணை ஆணையர் சபர்மதி தலைமையில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் 275 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினரும் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் முகாமிட்டுள்ளனர். குண்டம் நடைபெற்ற நேற்று அதிகாலை நேரத்தில் மட்டும் கோவில் வளாகம் மற்றும் கோவிலைச் சுற்றி 2ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்தனர்.

Next Story