100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி
தினக்கூலி உயர்த்தப்படுவதுடன் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி அளித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கொ.வல்லுண்டாம்பட்டு, நா.வல்லுண்டாம்பட்டு, மருங்குளம், குருங்குளம் கிழக்கு, குருங்குளம் மேற்கு, சூரியம்பட்டி, துலுக்கம்பட்டி, திருக்கானூர்பட்டி, இனாத்துக்கான்பட்டி, சென்னம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். அப்போது அவரை, பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:-
கடந்த முறை நான் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அம்மா என்மீது வைத்திருந்த நம்பிக்கை, பற்றால் 2 நாளில் நாடாளுமன்ற உறுப்பினராக்கினார். இந்த தொகுதியில் 600 பேருக்கு மேல் வேலை வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளேன். சாதி, மதம் பார்ப்பது இல்லை. எந்த கட்சி என்று கூட பார்த்தது இல்லை. தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு என பார்ப்பது இல்லை. காரணம் இந்த தொகுதி வளர்ச்சி, மக்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சேவை செய்துள்ளேன்.
பகுதிநேர ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், ஊட்டச்சத்து அமைப்பாளர், சத்துணவு அமைப்பாளர்கள், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் என கட்சி பாகுபாடு இன்றி என ஒரு பைசா செலவு இல்லாமல் வேலை வாங்கி கொடுத்துள்ளேன். பிறர் மகிழ்ச்சி அடைந்தால் நமக்கு வளர்ச்சிக்கு ஏற்படும். இறைவன் நமக்கு உயர்வை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் செய்து கொடுத்துள்ளேன்.
100 நாள் வேலை திட்டம் கொரோனா முடிந்தவுடன் 150 நாட்களாக உயர்த்தப்படும். சம்பளமும் உயர்த்தி வழங்கப்படும். ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் கொடுக்கப்படும். சுயஉதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் வாங்கி கடன் ரத்து செய்யப்படும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுத்தார்களோ, அதேபோல் வாஷிங்மிஷின் கொடுக்கப்படும். கேபிள் இணைப்பு விலையில்லாமல் கொடுக்கப்படும்.
இளைஞர்கள், மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க எனது சொந்த செலவில் பயிற்சி மையம் ஒரத்தநாட்டில் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரத்தநாட்டில் சிட்கோ தொழிற்பேட்டை அமைய நடவடிக்கை எடுப்பேன். ஜெயலலிதா நல்வழியில் செயல்படும் அ.தி.மு.க. ஆட்சி தொடர இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story