திருநின்றவூரில் மோட்டார் சைக்கிளில் சென்று பாண்டியராஜன் வாக்கு சேகரிப்பு
திருநின்றவூரில் மோட்டார் சைக்கிளில் சென்று அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான பாண்டியராஜன் வாக்கு சேகரித்தார். அப்போது, ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
சென்னை,
ஆவடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை நடைபயிற்சி சென்றவாறு காந்திநகர் மற்றும் பக்தவச்சலபுரத்தில் கே.பாண்டியராஜன் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது நடைபயிற்சிக்கு வந்தவர்களிடம், இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து ‘இயேசு அழைக்கிறார்' (ஜீசஸ் கால்ஸ்) சார்பில் நடத்தப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து மோரை, சீயோன் குளோரியஸ் தேவாலயத்தில் நடைபெற்ற அனைத்து பாதிரியார்கள் சந்திப்பு கூட்டத்திலும் பங்கேற்று கே.பாண்டியராஜன் வாக்கு சேகரித்தார். மாலையில் திருநின்றவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார்.
பணிகளை பட்டியலிட்ட கே.பாண்டியராஜன்
திருநின்றவூரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்று, தான் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து அப்பகுதி மக்களிடம் எடுத்து கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் திருநின்றவூர் காவல் நிலையம் ரூ.83 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ளது. திருநின்றவூரில் பஸ் நிலையம் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அப்பகுதியில் தான் செய்த பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அங்கு கூடியிருந்த மக்களிடம் கே.பாண்டியராஜன் பட்டியலிட்டார்.
அரசு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா
இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து, கே.பாண்டியராஜன் பேசியதாவது:-
என்னை இந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்தால், வரும் 5 ஆண்டுகளில் திருநின்றவூரில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி கட்டித்தரப்படும். ஈசா ஏரி, அராபத் ஏரி மற்றும் ஐய்யன் ஏரி ஆகிய ஏரிகள் பசுமை பூங்காவாக மாற்றம் செய்யப்படும். ஈசா ஏரி முதல் தண்டுரை ஏரி வரையில் ரெயில்வே கடவுப்பாதை அருகில் மழைநீர் கால்வாய் அமைக்கப்படும். இதன்மூலம் ராமதாஸ்புரம், இந்திரா நகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்குவது தவிர்க்கப்படும். திருநின்றவூர் பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மின் நுகர்வோர் பகுதியை ஆவடி மின் பகிர்மான கோட்டத்துடன் இணைப்பேன். திருநின்றவூரில் புதிய அரசு கால்நடை மருத்துவமனை அமைத்து தரப்படும். புதிதாக அம்மா உணவகம் திறக்கப்படும். பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தருவேன். பெரியகாலனி கங்கையம்மன் கோவில் குளத்தினை தூர்வாரி சுற்றுசுவர் அமைத்து நடைபாதை அமைத்து தரப்படும்.
இவை அனைத்தையும் உங்களுக்காக செய்து தருவதற்கு, நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story