மகளிர் நலனில் அதிக அக்கறை கொண்டது தான் அ.தி.மு.க. அரசு மணப்பாறை தொகுதி வேட்பாளர் சந்திரசேகர் பிரசாரம்


மகளிர் நலனில் அதிக அக்கறை கொண்டது தான் அ.தி.மு.க. அரசு மணப்பாறை தொகுதி வேட்பாளர் சந்திரசேகர் பிரசாரம்
x
தினத்தந்தி 31 March 2021 9:15 AM IST (Updated: 31 March 2021 9:15 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை ஒன்றியத்தில் மலையடிப்பட்டி செட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று இரட்டை இலைக்கு வாக்களித்திட பிரசாரம் மேற்கொண்டார்.

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் நேற்று மணப்பாறை ஒன்றியத்தில் மலையடிப்பட்டி செட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று இரட்டை இலைக்கு வாக்களித்திட பிரசாரம் மேற்கொண்டார். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்ற அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. ஆனால் இதற்கு முன்னர் கடந்த 10 ஆண்டுகால கழக ஆட்சி காலத்தில் மணப்பாறை தொகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் எல்லாம் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். குறிப்பாக மகளிர் பல்வேறு திட்டங்களினால் பயன்பெற்று வருவதையும் நினைத்து பார்க்க வேண்டும். திருமணத்தின் போது தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை, மானிய விலையில் இருசக்கர வாகனம் என அடுக்கடுக்கான திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். 

இதுபோன்ற திட்டங்கள் மட்டுமின்றி இன்னும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த உள்ளது என்பதும் கழக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகளிருக்கான திட்டங்கள் அதிகம். குறிப்பாக குடும்ப தலைவிக்கு 1500 ரூபாய், வருடத்திற்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர், இலவச வாஷிங் மிஷின், பேருந்தில் 50 சதவிகித கட்டண சலுகை என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அரசைப் பொறுத்தவரை சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இதுமட்டுமல்ல சட்டம் ஒழுங்கிலும் கூட சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே மக்கள் எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து இந்த முறையும் அ.திமு.க.விற்கு வாக்களித்து எனக்கு மகத்தான வெற்றியை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று பேசினார். இதில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க., த.மா.கா. உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

Next Story