கடும் வெயிலில் கருகும் தேயிலை செடிகள்
கூடலூர் பகுதியில் கடும் வெயிலில் தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் கடும் வெயிலில் தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கடும் வெயில்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அரசு தேயிலை தோட்டங்கள் மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. ஆண்டுதோறும் 6 மாதங்கள் பருவமழை பெய்து வருவதால், இங்கு தேயிலை உள்பட அனைத்து விவசாயமும் நடைபெற்று வருகிறது.
தற்போது கோடைகாலம் என்பதால் பகலில் கடும் வெயில் காணப்படுகிறது. வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே சிரமப்படுகின்றனர்.
இதேபோல் நீர் நிலைகளும் வறண்டு விட்டதால், விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. வனப்பகுதியிலும் வறட்சி நிலவுகிறது.
மகசூல் பாதிப்பு
இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அந்த வறட்சியின் தாக்கம் தேயிலை தோட்டங்களிலும் காணப்படுகிறது. கடும் வெயிலால் தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதேபோன்று தொழிற்சாலைகளுக்கும் பச்சை தேயிலை வரத்தும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதனால் அங்கு தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து கூடலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கோடை மழை பெய்யுமா?
தற்போது பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.22 என விலை கிடைக்கிறது. கூடலூர் பகுதியில் கடும் வெயிலாக இருப்பதால் நிலத்தின் ஈரத்தன்மை குறைந்து விட்டது.
இதன் காரணமாக தேயிலை செடிகளில் பச்சை தேயிலை மகசூல் இல்லை. மேலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் செடிகள் கருகி வருகிறது.
தினமும் 100 கிலோ அறுவடை செய்யப்படும் இடங்களில் பாதி அளவாக மகசூல் குறைந்துள்ளது.
பெரிய தேயிலை தோட்டங்களில் கிணறுகளில் இருந்து தண்ணீர் இறைத்து ஸ்பிரிங்ளர் மூலம் செடிகளுக்கு தெளித்து வருகின்றனர். ஆனால் சிறிய தோட்டங்களில் பாசனத்துக்கு வழியில்லை.
கோடை மழை நன்கு பெய்தால் மட்டுமே தேயிலை மகசூல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story