விபத்தில் சுயநினைவை இழந்த கல்லூரி மாணவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்ய கோவை கோர்ட்டு உத்தரவிட்டது
கல்லூரி மாணவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
கோவை
விபத்தில் சுயநினைவை இழந்த கல்லூரி மாணவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்ய கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
கல்லூரி மாணவர்
கோவை சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் அருண் விக்னேஷ் (வயது 31). இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், கடந்த 1-7-2011-ம் ஆண்டு கல்லூரி முடிந்து அரசு பஸ்சின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது பஸ் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டு உள்ளார். இதனால் அருண்விக்னேஷ் எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து தூக்கி வௌியே சாலையில் வீசப்பட்டார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சுயநினைவை இழந்தார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்தியில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் குணமடைய 83 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று டாக்டர்கள் சான்று அளித்தனர்.
அரசு பஸ் ஜப்தி
இது குறித்த வழக்கு கோவை மாவட்ட மோட்டார் வாகன சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
விபத்தில் சுயநினைவை இழந்த கல்லூரி மாணவர் அருண் விக்னேசின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க கோரி கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜெயபால் கோர்ட்டில் நிறை வேற்றுதல் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா, விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவருக்கு இழப்பீடு வழங்காததால் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தர விட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று முதல்கட்டமாக சிவானந்தாகாலனி பஸ்நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்த அரசு பஸ் ஒன்று ஜப்தி செய்யப்பட்டு, கோவை கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டது. மனுதாரர் தரப்பில் வக்கீல் தீபக்குமார் ஆஜரானார்.
Related Tags :
Next Story