கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிராமங்களுக்கு மினிபஸ் சேவை அ.தி.மு.க வேட்பாளர் ஏ.லோகிராஜன் உறுதி
கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிராம மக்கள் பயனடையும் வகையில் கடமலைக்குண்டுவை மையமாக வைத்து மினிபஸ் சேவை தொடங்கப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் உறுதி அளித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.லோகிராஜன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு, வாலிப்பாறை, தும்மக்குண்டு, காமராஜபுரம், கோரையூத்து, சிங்கராஜபுரம், பூசணூத்து உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு சென்று திறந்தஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தார். முன்னதாக அவருக்கு கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
இங்குள்ள மலைக்கிராமங்களில் பாதை, சோலார்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. வனப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுக்கவும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தற்போதைய அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு இப்பிரச்சினையில் ரவீந்திரநாத் எம்.பி. தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
மக்கள் தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடர்வதையே மீண்டும் விரும்புகின்றனர். ஆகையால் 3-வது முறையாக அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். அதன்பின்னர் மலைக்கிராம பகுதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணிகள் தங்குதடையின்றி தொடரும். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு போதிய நடவடிக்கை எடுக்கும். ஆனால் எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் பயனடையும் வகையில் கடமலைக்குண்டுவை மையமாக வைத்து அரண்மனைப்புதூர், கீழபூசணூத்து, சிங்கராஜபுரம் வழியாக அரசு மினிபஸ் சேவை தொடங்கப்படும். இதுபோல எண்ணற்ற நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் தேனி மாவட்ட அ.தி.மு.க துணைச்செயலாளர் முருக்கோடை ராமர், கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.தர்மராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story