கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி கலெக்டர் கிரண்குராலா ஆய்வு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி  கலெக்டர் கிரண்குராலா ஆய்வு
x
தினத்தந்தி 31 March 2021 10:30 PM IST (Updated: 31 March 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

1,569 வாக்குச்சாவடி மையங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதியில் 416 வாக்குச்சாவடி மையங்கள், ரிஷிவந்தியம் தொகுதியில்-374, சங்கராபுரம் தொகுதியில்-372, உளுந்தூர்பேட்டை தொகுதியில்-407 என மொத்தம் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 

இங்கு வாக்குப்பதிவுக்காக 2,832 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், 1,885 கட்டுப்பாட்டு எந்திரம், 2,120 வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் எந்திரம் என மொத்தம் 5,890 எந்திரங்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்து அந்தந்த தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது. 

சின்னம் பொருத்தும் பணி

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள 416 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.  இந்த தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் என மொத்தம் 1,000 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவை  உறுதிப்படுத்தும் எந்திரம்-500, கட்டுப்பாட்டு எந்திரம்-500 ஆகியவை கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்துதல் மற்றும் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரத்தில் பேப்பர் ரோல் மற்றும் பேட்டரி பொருத்தும் பணியை கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

இதில் மண்டல அலுவலர்கள், மண்டல உதவி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சந்திரசேகர் வாலிம்பே ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர். 

அதேபோல் சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story