விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மாதிரி வாக்குப்பதிவு செய்வதற்கு ஏற்ப ஒவ்வொரு தொகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி.பேட் கருவிகளில் 5 சதவீத எந்திரங்கள், பாதுகாப்பு அறையில் இருந்து தனியாக எடுக்கப்பட்டது.
இந்த 3 எந்திரங்களையும் பொருத்தி மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நேற்று காலை முதல் மாலை வரை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு செய்ததோடு அதனை வி.வி.பேட் கருவி மூலமும் சரிபார்த்தனர். மேலும் அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் அதிகாரிகளிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் நடந்த மாதிரி வாக்குப்பதிவை தேர்தல் பொது பார்வையாளர் ரஞ்சிதா, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடசுப்பிரமணியன், கோவர்த்தனன் ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story