முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்
கோவை, நீலகிரி மாவட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
கூடலூர்,
தமிழகத்தில் வருகிற 6- ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதற்காக அவர் கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு கூடலூரில் உள்ள தனியார் பள்ளிக்கூட மைதானத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஐந்துமுனை சந்திப்பு பகுதியில் திறந்த வேனில் நின்றவாறு அ.தி.மு.க. வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து பேசுகிறார்.
பலத்த பாதுகாப்பு
பின்னர் பிற்பகல் 12 மணிக்கு குன்னூருக்கு செல்லும் முதல்-அமைச்சர் குன்னூர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் கப்பச்சி டி.வினோத், ஊட்டி பா.ஜனதா வேட்பாளர் போஜராஜன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூடலூர் வருகையை யொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதற்காக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதேபோல் ஹெலிகாப்டரில் வரும் முதலமைச்சர் பாதுகாப்பாக இறங்குவதற்காக ஹெலிபேட் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் இரவு பகலாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவையில் ஆதரவு திரட்டுகிறார்
நீலகிரியில் பிரசாரம் முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிற்பகல் 3 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
கோவைக்கு முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவையில் பிரசாரம் முடிக்கும் முதல்-அமைச்சர், கார் மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.
Related Tags :
Next Story