செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை
வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட தோ்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
சிவகங்கை,
வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட தோ்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
கண்காணிப்பு
நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலையொட்டி நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கான மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட கலெக்டருமான மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1,679 வாக்குப்பதிவு மையங்களுக்கும் 126 மண்டல அலுவலா்கள் மற்றும் 126 துணை மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு மண்டல அலுவலரும் சராசரியாக 11 முதல் 17 வாக்குப்பதிவு மையங்கள் வரை கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு நாளான 6.4.2021 அன்றுக்கு முதல்நாள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட தேவையான அனைத்து பொருட்களும் தோ்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து சரிபார்த்து வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
மாதிரி வாக்குப்பதிவு
தற்போது தேர்தல் ஆணைய அறிவுரைப்படி, கோவிட்-19 காலத்தை கருத்திற்கொண்டு சுகாதாரத்துறையின் மூலம் பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலான 15 வகை உபகரணங்கள் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் வழங்கப்பட்டு உள்ளது. அவற்றையும் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கு எடுத்துச்சென்று வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களுக்கு பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்னதாக வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் வருகை தரவேண்டும்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்குமுன் மாதிரி வாக்குப்பதிவு முறை அனைத்து வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின் வாக்குப்பதிவை நடத்த வேண்டும். வாக்குப்பதிவு தொடங்கியது முதல் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, வாக்கு எண்ணிக்கை விவரம் குறித்து மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வாக்குப்பதிவின்போது ஏதேனும் மின்னணு எந்திரங்கள் பழுது ஏற்படுவது கண்டறிந்தால் உடனடியாக சரிசெய்து வாக்குப்பதிவுகளை தொடர வேண்டும். எக்காரணத்தை கொண்டும் காலதாமதம்படுத்துதல் கூடாது. அவ்வாறு காலதாமதமானால் வாக்குப்பதிவு முடியும் நேரம் காலதாமதம் ஆகும்.
அனுமதி இல்லை
எனவே அந்த சூழ்நிலையை உருவாக்கக்கூடாது. அதேபோல் வாக்குப்பதிவு நடைபெறும் அரங்கில் பணிபுரியும் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு மையத்திற்கு வரும் வாக்காளர்கள் செல்போன் கொண்டு வருவதை அனுமதிக்கக்கூடாது. மேலும், வயதானவர்கள், கண்பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் விருப்பப்பட்டால் வாக்களிக்க வரும்போது அவர்களுடன் உதவியாளர்களை அனுமதிக்கலாம். அப்போது அதற்குரிய படிவத்தில் அவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, காரைக்குடி தோ்தல் நடத்தும் அலுவலர்கள் சுரேந்திரன் (காரைக்குடி), சிந்து (திருப்பத்தூர்), கலெக்டரின் நேர்முக உதவியாளா் (பொது).ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story