திருச்சியில் முதல்-அமைச்சர் பிரசாரத்தை கேட்டுவிட்டு திரும்பிய போது அ.தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் ரெயிலில் அடிபட்டு பலி
திருச்சியில் முதல்-அமைச்சர் பிரசாரத்தை கேட்டுவிட்டு திரும்பிய போது அ.தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் ரெயிலில் அடிபட்டு பலியானார்கள்.
திருச்சி,
திருச்சியில் முதல்-அமைச்சர் பிரசாரத்தை கேட்டு விட்டு திரும்பிய அ.தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
தேர்தல் பிரசாரம்
திருச்சியில் நேற்று முன்தினம் இரவு மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தை கேட்கவும், காணவும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், கார்களில் வந்து திரண்டிருந்தனர். உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பஸ் மூலம் திருச்சி வந்து எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பினர்.
ரெயிலில் அடிபட்டு 2 தொண்டர்கள் சாவு
அதில், திரும்பிய சோபனபுரம் பறையர் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி (வயது 60), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டர் சம்பத் (55) ஆகிய இருவரும் திருச்சி ஸ்ரீரங்கம்-டவுன் ரெயில் நிலையங்களுக்கு இடைபட்ட மரக்கடை தண்டவாளப்பகுதியில் மதுஅருந்தி விட்டு இரவு தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி, இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
நேற்று இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்-அமைச்சரின் கூட்டத்திற்கு சென்று திரும்பிய தொண்டர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம், சோபனபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story