திம்பம் மலைப்பாதையில் குடிநீர் கிடைக்காமல் சுற்றி திரியும் குரங்குகள் தண்ணீர் தொட்டிகள் அமைக்க கோரிக்கை


திம்பம் மலைப்பாதையில் குடிநீர் கிடைக்காமல் சுற்றி திரியும் குரங்குகள் தண்ணீர் தொட்டிகள் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 31 March 2021 8:46 PM GMT (Updated: 31 March 2021 8:46 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் குடிநீர் கிடைக்காமல் குரங்குகள் சுற்றி திரிகின்றன. எனவே தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திம்பம் மலைப்பாதையில் குடிநீர் கிடைக்காமல் குரங்குகள் சுற்றி திரிகின்றன. எனவே தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்குகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், பவானிசாகர், விளாமுண்டி, சத்தியமங்கலம், டி.என்.பாளையம் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரங்களில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், குரங்கு, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது வனப்பகுதி முழுவதும் காய்ந்து குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. சில இடங்களில் காட்டு தீ பற்றி மரம் செடி, கொடிகள் கருகி கிடக்கிறது.
தண்ணீருக்காக தவிக்கும் குரங்குகள்
இதன் காரணமாக யானை, மான், குரங்கு போன்ற விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு-தண்ணீர் தேடி தினமும் வனப்பகுதி சாலைகளில் குரங்கு போன்ற வனவிலங்குகள் சுற்றி திரிந்து வருகின்றன. 
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது:- 
 திம்பம் மலைப்பாதை சாலை ஒரங்களில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் உணவு, தண்ணீர் இல்லாமல் உடல் மெலிந்து காணப்படுகிறது. சாலையில் செல்பவர்கள் தண்ணீர் தருவார்களா என ஏங்கி தவித்து காத்து கொண்டு இருக்கிறது. மேலும் சாலை ஓரத்தில் கிடக்கும் காலி தண்ணீர் பாட்டிலை எடுத்து அதில் இருக்கும் சொட்டு தண்ணீரை குரங்குகள் பருகுகின்றன.
தண்ணீர் தாகத்தால் லாரிகளில் இருந்து வழியும் ஆயில்களை மண்டியிட்டு தனது நாக்கால் குரங்குகள் பருகும் காட்சி காண்போரை கண்ணீர் வரவழைக்கிறது. எனவே வனத்துறையினர் திம்பம் மலைப்பாதையில் குரங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.

Next Story