அவல்பூந்துறை அருகே கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது; 3 பேர் பலி 13 பேர் காயம்
அவல்பூந்துைற அருகே கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர்.
அவல்பூந்துைற அருகே கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர்.
தீர்த்தம் எடுக்க..
அவல்பூந்துறை அருகே வெள்ளியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து இரவு 10.30 மணி அளவில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
கோவில் அருகே சென்றதும், முன்னால் சென்றவர்கள் பலர் தீர்த்தம் ஊற்ற கோவிலுக்குள் சென்றுவிட்டார்கள். பின்னால் வந்தவர்கள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் ஈரோடு-பழனி மெயின் ரோட்டு ஓரம் நின்று கொண்டு இருந்தார்கள்.
விபத்தில் 2 பேர் பலி
அப்போது ஈரோட்டில் இருந்து அவல்பூந்துறை நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் ரோட்டோரம் இருந்த 15-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களை மோதி சேதப்படுத்தியது. மேலும் நிற்காமல் அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் பக்தர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், கண்ணம்மாள் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள். பழனிசாமி (வயது 42), கணபதி (53), அம்மணி (48), மகேஸ்வரி (26), ரஞ்சித் (11), பொன்னுசாமி (55), விஸ்வநாதன் (28), ராமசாமி (48), சேகர் (35), முருகன் (60), கார்த்தி (26) ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம்
மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி அவல்பூந்துறையை சேர்ந்த யுவராஜ் (32), அவருடைய மனைவி சமீர் பாத்திமா (26), குழந்தை சுஜித் (1½) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தில் கார் நொறுங்கி சேதம் அடைந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒருவர் சாவு
படுகாயமடைந்த 11 பக்தர்களையும் சிகிச்ைசக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து 10 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். யுவராஜ், சமீர் பாத்திமா, சுஜித் ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சு.முத்துசாமி, மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.கே.சரஸ்வதி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, காயமடைந்தவர்களை பார்வையிட்டனர். மேலும் அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
சோகம்
காரில் வந்தவர்கள் ஈரோட்டில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து நடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் திருவிழாவுக்கு வந்த 3 பேர் கார் மோதி பலியானது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story