உங்களின் நண்பனாய், உங்களில் ஒருவனாய் இருப்பேன் தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பிரசாரம்


உங்களின் நண்பனாய், உங்களில் ஒருவனாய் இருப்பேன் தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 7:37 AM IST (Updated: 1 April 2021 7:37 AM IST)
t-max-icont-min-icon

மதுரை வடக்கு சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி தொகுதி முழுவதும் தீவிர சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மதுரை,

பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து பூ தூவி உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். நேற்று கோ.தளபதி ரேஸ்கோர்ஸ், மாநகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து தளபதி வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  பிரசாரத்தின் போது கோ.தளபதி கூறியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். எனவே தி.மு.க. ஆட்சி அமைய போவது உறுதி. மக்களின் எண்ணப்படி மு.க.ஸ்டாலின் முதல்அமைச்சராக பொறுப்பேற்றார். அதனால் இருண்ட தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்க போகிறது. இந்த தேர்தலின் போது தி.மு.க. அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதி வழங்கப்படும். பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்படும். விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். 

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் தீர்க்கப்படும். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் குடிநீர் கூட சரியாக வருவதில்லை என்று கூறுகின்றனர். 10 ஆண்டு காலமாக மக்கள் இருட்டில் இருந்து விட்டனர். இனி அவர்களுக்கு விடிவு காலம். என்னுடைய முதல் பணி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தான். அனைத்து வீடுகளுக்கு குழாய் மூலம் நிச்சயம் தண்ணீர் வரும். அதே போல் பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, சுகாதார வசதிகள் என அனைத்தும் மேம்படுத்தப்படும். குறிப்பாக சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். 

நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.  மக்களுக்கு சேவை செய்யவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.  உங்களின் நண்பனாய், உங்களில் ஒருவனாய் இருப்பேன் நிச்சயம் இருப்பேன். நான் மக்களுக்கு அளிக்கும் அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன். உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு நீங்கள் முழு ஆதரவு தர வேண்டும். எதிர்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Next Story