தாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும் நன்னிலம் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் உறுதி


தாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும் நன்னிலம் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் உறுதி
x
தினத்தந்தி 1 April 2021 10:59 AM IST (Updated: 1 April 2021 10:59 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிட மக்களுக்கான தாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று, நன்னிலம் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் உறுதி அளித்தார்.

வலங்கைமான், 

நன்னிலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வலங்கைமான் ஒன்றியத்தில் கீழவிடையல், மேலவிடையல், சித்தன்வாழூர், கண்டியூர், தொழுதூர், பாடகச்சேரி, விருப்பாட்சிபுரம், ஆதிச்சமங்கலம் மற்றும் வலங்கைமான் பேரூராட்சியில் லாயம், வளையமாபுரம், கடைத்தெரு, அக்ரஹாரம், கள்ளர் தெரு, கோவில்பத்து உள்ளிட்ட அனைத்து  பகுதிகளிலும் அமைச்சர் காமராஜ் வாக்கு  சேகரித்தார். 

கீழவிடையல் பகுதியில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்த போது அங்கிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.  அப்போது கீழவிடையலில் ஒரு பெண் குழந்தைக்கு ஜெயசக்தி என்றும், மேலவிடையலில் ஒரு ஆண் குழந்தைக்கு ஜெயசேகரன் என்றும் பெயர் வைத்தார். பின்னர் அமைச்சர் 
இரா.காமராஜ் கூறியதாவது:- அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு தொடர்ந்து உதவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளை பெறுவதற்கும் முன்னேற்றங்களை அடைவதற்கும் அ.தி.மு.க. அரசு பல திட்டங்களை தந்துள்ளது. இந்த வகையில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் ஆதிதிராவிட மக்கள் வாங்கிய தாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும். 

பழுதடைந்துள்ள பழைய தொகுப்பு வீடுகள் அகற்றப்பட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்படும். தாழ்த்தப்பட்டவர்களுக்கான சிறப்பு கூறுகள் திட்ட நிதி ஆணையம் உருவாக்கப்பட்டு அனைத்து உதவிகளும் உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்தத் திட்டங்களை செயல்படுத்த இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் .காமராஜ்  கேட்டுக்கொண்டார்.

Next Story