தி.மு.க. வாக்குறுதிகளை எடுத்துக்கூறி ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பா வாக்கு சேகரிப்பு
ம.தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
கீழப்பழுவூர்,
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் நேற்று அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். பின்னர், அவர்கள் அளித்த கோரிக்கையான ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து வளாகத்தின் அருகில் இருந்த பொதுமக்கள் இடையே வாக்கு சேகரித்த அவர், தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அரியலூரில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கப்படும், கொள்ளிடம் மற்றும் மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்படும்.
படித்த மற்றும் வேலை தேடும் அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கான தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன். தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த அவர் பொதுமக்களிடம் அதற்கான துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் அவர், தான் வெற்றி பெற்றதும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னை சந்தித்து குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றார்.
வாக்கு சேகரிப்பின்போது ம.தி.மு.க. நகர செயலாளர் வழக்கறிஞர் மனோகரன், வழக்கறிஞர்கள் ராஜசேகரன், அன்பரசன், மணிமாறன், ராஜா மற்றும் தி.மு.க. நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story