மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது - வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் பேச்சு


மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது - வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2021 5:27 PM IST (Updated: 1 April 2021 5:27 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது என வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் பேசினார்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சந்திரசேகர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மருங்காபுரி ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பெண்கள் திரளாக நின்று வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அவர் பேசியதாவது:-

மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவிலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நீர்நிலைகள் எல்லாம் தூர் வாரப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மட்டுமே மணப்பாறை தொகுதிக்கு ரூ.33 கோடி வரை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மணப்பாறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும் கூட திட்டங்களே செய்யாதது போன்று ஒரு பொய்யை பரப்பி எப்படியாவது அ.தி.மு.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த இயக்கத்தை யாராலும், எப்போதும் அழித்து விட முடியாது. இரட்டை இலை என்பது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சின்னம். இதனால் தான் மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. தொடர்ந்து மகத்தான வெற்றியை பெற்று வருகின்றது. இம்முறையும் அ.தி.மு.க. வெற்றி பெற்று தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மக்களாகிய நீங்கள் அனைவரும் சிந்தித்து வாக்களித்திட வேண்டும். கழக அரசினால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். பொய் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். ஆனால் மணப்பாறை தொகுதி மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து இதுவரை கண்டிராத அளவிலான வெற்றியை தந்திட வேண்டும் என்று 
கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Next Story