சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை,
கோவை ரத்தினபுரி கே.கே.புதூரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38). பெயிண்டர். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி கோவையை சேர்ந்த 8 வயது சிறுமியை பொதுகழிவறைக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போக்சோ சட்டத்தில் ஷாஜகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் ஷாஜகானுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பு அளித்தார்.
மேலும் அவர், அபராத தொகை ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ரஷிதா பேகம் ஆஜரானார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு பதிவாகி ஒரு ஆண்டே ஆன நிலையில் விசாரணை முடிந்து ஷாஜகானுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story