கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வந்தால் அரசியலை விட்டு விலக தயார் - தேர்தல் பிரசாரத்தில் தளவாய்சுந்தரம் பேச்சு


கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வந்தால் அரசியலை விட்டு விலக தயார் - தேர்தல் பிரசாரத்தில் தளவாய்சுந்தரம் பேச்சு
x
தினத்தந்தி 2 April 2021 12:00 AM IST (Updated: 1 April 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக துறைமுகம் வந்தால் நான் அரசியலை விட்டு விலக தயார் என்று தேர்தல் பிரசாரத்தின் போது அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் பேசினார்.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக தளவாய் சுந்தரம் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று பள்ளம், கேசவன் புத்தன்துறை, தர்மபுரம், மணக்குடி, கோவளம் உள்பட பல்வேறு கடற்கரை பகுதிகளில் மீனவர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

மீனவர்கள் எப்போதுமே அ.தி.மு.க.வின் பக்கம் என்பதை பலமுறை தேர்தலில் நிரூபித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சி காலம் முதல் மீனவர்கள் தொடர்ச்சியாக அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வந்துள்ளனர். இந்த பகுதியில் சுனாமி வந்த போது மக்களோடு மக்களாக நின்று நான் உங்களுடன் பணிபுரிந்ததை நீங்கள் எல்லாம் மறந்து இருக்க மாட்டீர்கள். மீனவ மக்கள் மீது அளவு கடந்த பாசம் கொண்டவன் நான். உங்களோடு எனக்கு இருக்கின்ற பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. மீனவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எனது உயிரைக் கொடுத்தேனும் அவர்களை காப்பாற்றுவேன்.

ஆனால் சிலர் மீனவர்களுக்கும், எனக்கும் இடையே சூழ்ச்சி செய்து பிரிவை உண்டாக்கி விடலாம் என கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. 
கன்னியாகுமரி அருகே சரக்கு பெட்டக துறைமுகம் ஒருபோதும் வராது என்று நான் பலமுறை உறுதி அளித்து இருக்கிறேன். அதேபோல் சில தினங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்துக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க. அரசு இந்த துறைமுகத்தை அமைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்காது என உறுதிபடக் கூறியுள்ளார். ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் சிலர் அரசியல் சூழ்ச்சி செய்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். கன்னியாகுமரியில் துறைமுகம் வந்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன்.

அ.தி.மு.க. அரசு 3-வது முறையாக பொறுப்பேற்றதும் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். பெண்களின் பணிச் சுமையை குறைக்கும் விதமாக ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக வாஷிங்மெஷின் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கிருஷ்ணன், மாநில மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் திபூர்சியஸ், துணைத் தலைவர் ஷாஜின் காந்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் வீராச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஏராளமான மீனவ பெண்கள் கூடி நின்று தளவாய் சுந்தரத்திற்கு வரவேற்பு அளித்தனர்.

Next Story