பூங்காவில் பழமையான கட்டிடங்களை பொலிவுபடுத்தும் பணி தொடக்கம்


பூங்காவில் பழமையான கட்டிடங்களை பொலிவுபடுத்தும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 1 April 2021 11:39 PM IST (Updated: 1 April 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு பூங்காவில் பழமையான கட்டிடங்களை பொலிவுபடுத்தும் பணி தொடங்கி உள்ளது.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்காட்சிகள் மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்கள் வடிவமைக்கப்படுகிறது. இதனை கண்டு ரசிக்க வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் ஊட்டிக்கு வருகை தருவார்கள்.

கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம்(மே) 124-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் பூங்காவின் மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்கள், மரங்களை சுற்றிலும் நடவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுப்பொலிவு

நூற்றாண்டு பழமை வாய்ந்த பூங்காவின் நுழைவுவாயில் பழமை மாறாமல் வர்ணம் தீட்டும் பணி நடைபெற்றது. அதேபோல் ஆங்கிலேயர் காலத்தில் நுழைவுவாயிலாக இருந்த பழமையான கட்டிடத்தில் வர்ணம் தீட்டப்பட்டது. தற்போது நடை பாதை ஓரம் உள்ள தடுப்பு கம்பிகள், கட்டிடங்கள் வர்ணம் தீட்டப்பட்டு வருவதால் பூங்கா புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் நிழற்குடைகளில் பல வண்ணங்களில் வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. இருக்கைகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் நீலகிரி வாழ் பறவைகளின் உருவப்படம் தத்ரூபமாக வரையப்பட்டு இருக்கிறது.

பூத்துக்குலுங்கும் மலர்கள்

கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒருபுறம் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்கும். மறுபுறம் இயற்கை அழகுடன் பூங்கா பொலிவாக காட்சியளிக்க உள்ளது. 

இதற்கான பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story