தூத்துக்குடியில் ஆழ்கடலில் உருவான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம்
தூத்துக்குடியில் ஆழ்கடலில் உருவான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் முத்து குளித்தலை மையப்படுத்தி ஆழ்கடலில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலர்களும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒன்றிணைந்து சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்கிறார்கள். மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, கடலுக்கு அடியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி முத்து குளிப்பவர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும். அவர்கள்தான் முத்து குளிப்பதற்கு என பயிற்சி எடுத்துள்ளார்கள். இவர்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சிறப்பாக இருக்கும் எனும் அடிப்படையில் முத்து குளித்தல் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டு இன்று வெளியிடப்படுகிறது. எனவே இந்த விழிப்புணர்வு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் நமது மாவட்டத்தில் புதுமையான விழிப்புணர்வாக இருக்கும். இதன்மூலம் நமது மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ்குமார், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், மீன்வளத்துறை ஆய்வாளர் அக்னிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story