தமிழகத்தில் மாற்றம் ஏற்பட எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்; நாசரேத்தில் சரத்குமார் பிரசாரம்
தமிழகத்தில் மாற்றம் ஏற்பட எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று நாசரேத்தில் நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்தார்.
நாசரேத்:
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜெயந்திகுமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று மதியம் நாசரேத்துக்கு வந்தார். அவருக்கு நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வேட்பாளர் ஜெயந்திகுமாரை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எங்களது கூட்டணியில் சாதாரண குடிமக்களுக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. எளியவர்களை வேட்பாளராக நிறுத்துவதால் அவர்களுக்கு மக்களின் பிரச்சினைகள் எளிதாக தெரியவரும். மேலும் அரசாங்கத்திடம் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி தீர்வுகளை பெற்று கொடுப்பார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் உழைப்பால் உயர்ந்தவர். தனது 6 வயதில் இருந்ேத உழைக்க தொடங்கியவர். அவர் மக்களுக்கு சேவை செய்வதற்காக கட்சியை தொடங்கி இருக்கிறார். ஆகவே, தமிழகத்தில் மாற்றம் ஏற்பட தேர்தலில் எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் ஜெயந்திகுமாரை வெற்றி பெற செய்தால் அவர் உங்கள் குறைகளை சட்டமன்றத்தில் உரக்க ஒலிக்க செய்வார். எனவே, அவருக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஆறுமுகநேரி, திருச்செந்தூர், பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘கடும் முயற்சி செய்து உழைத்து உயர்ந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இரு திராவிட இயக்கங்களுக்கும் மாற்றாக ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் தான் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் செல்ல முடியும் என்ற அவல நிலை உள்ளது. அதை மாற்ற வேண்டும். எங்களது தேர்தல் அறிக்கையில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு, பெண்கள் பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் உயர வேண்டும் என்பதற்காக படித்து வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஊதியம் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்று உள்ளது. தேவையற்ற இலவசங்கள் தருவதாக இல்லை. வாக்குக்கு பணம் கொடுத்தால் தயவு செய்து வாங்காதீர்கள். அடுத்த தலைமுறை சீரழிந்து விடும்’ என்றார்.
Related Tags :
Next Story