மோட்டார் சைக்கிளில் வந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் பணம் பறிமுதல்
தோகைமலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குளித்தலை
வாகன சோதனை
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமார் தலைமையிலான குழுவினர் நேற்று தோகைமலை அருகே உள்ள வெள்ளப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பணம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தோகைமலை அருகே உள்ள கள்ளை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது அவர் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் எனவும், தோகைமலையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் பணம் போடுவதற்காக எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை குளித்தலை சட்டமன்றதொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story